* உலக அளவில் காசநோயை, 2030-க்குள் ஒழித்துவிட வேண்டும் எனும் எல்லைக்கோட்டை நிர்ணயித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
* 2025-க்குள், இந்தியாவில் காசநோயை ஒழிப்பதுதான் தேசிய அளவிலானகுறிக்கோள் என்று மத்திய அரசு அறிவித் துள்ளது.
* சமீபத்தில் டெல்லியில் மத்திய சுகாதாரத் துறையும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய காசநோய் ஒழிப்பு மாநாட்டில் காசநோய் இல்லாதஇந்தியா எனும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
* உலக அளவில் காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடு இந்தியா. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 28 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2016-இல் இந்த நோயால் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
* காற்றின் வழியாகப் பரவக்கூடிய இந்த நோய் மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் என்கிற பாக்டீரியாவால் உண்டாகிறது.
* இந்தியாவில் 40% மக்களுக்குக் காசநோய்த் தொற்று இருக்கிறது. ஆனால், அது நோயாக மாறாத - உள்ளுறைந்த தொற்றாக - உடலில் மறைந்திருக்கிறது. இதை லேட்டன்ட் டிபி என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, இவர்களுக்கு முழுமையான காசநோய் ஏற்பட்டுவிடும். அப்போது அதன் நிலைமை இன்னும் தீவிரமாகும் என எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
* காசநோய்க்கான சிகிச்சை சர்வதேசத் தரத்தில் இந்தியாவில் உள்ள எல்லா அரசுமருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. ஆனால், இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் வரைகாசநோய் பரிசோதனைக்கோ,சிகிச்சைக்கோ வராமலேயே இருக்கின்றனர்.
* நம் சமுதாயத்தில் இன்றளவும் காசநோயாளிகளை அவரது குடும்பத் தினரும் உறவினர்களும் வெறுத்து ஒதுக்கிவைக்கும் நிலைதான் உள்ளது. இதனால், இந்த நோயாளிகள் சிகிச்சை பெற நேரடியாக மருத்துவமனைக்கு வரத் தயங்குகின்றனர். காசநோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்ட இரண்டு மாதங்களில் நோயின் அறிகுறிகள் மறைந்து விடுவதால், நோய் குணமாகிவிட்டது எனக் கருதிப் பெரும்பாலான நோயாளிகள் மருந்துகளைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
* இவர்களால் மற்றவர்களுக்கு அது பரவும்போது, மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாகவே பரவுகிறது. இந்தியா வில் இந்த நிலைமையில் 90 ஆயிரம் பேர் இருப்பதாக ஒரு கணக்கு இருக்கிறது.
* இந்தியாவில் காசநோய்க்கான தடுப்புத் திட்டங்கள் 20 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவற்றால் இன்னும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறபோது, புதிய அணுகுமுறைகளைப் பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகிறது.
* காசநோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சை அளித்து, கடைசி வரை அவர்களைக் கண்காணித்து, இந்த நோய் அவர் களுக்கு மட்டுமல்லாமல், அடுத்த வருக்கும் பரவாமல் தடுக்கும் புதிய உத்திகளைக் கையாள வேண்டிய நிலைமையை மகாராஷ்டிர அரசு நன்கு புரிந்துகொண்டு, தனது அரசின் திட்டங்களை நவீனப்படுத்தியுள்ளது.
* காசநோயை ஆரம்பத்திலேயே துல்லிய மாகக் கண்டுபிடிப்பதோடு அல்லாமல், மருந்துக்குக் கட்டுப்படாத நோயா, இல்லையா என்பதையும் முதலிலேயே தெரிவிக்கும் திறனுள்ள ஜீன் எக்ஸ்பர்ட் எனும் நவீன பரிசோதனைக் கருவியை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் அமைத்துள்ளது.
* காசநோய் பற்றி சுகாதார உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காத மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவுகள் 269, 270-ன் கீழ் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இது நடைமுறை சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்ட மகாராஷ்டிர அரசு, எல்லா நகரங்களிலும் கால் சென்டர்களை நிறுவியும், இலவசத் தொலைத்தொடர்பு எண்களைக் கொடுத்தும், காசநோயாளிகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் தொடர் சிகிச்சை விவரங்களை அவர்கள் மூலம் அரசுக்குத் தெரியப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் மூலம் காசநோய் குறித்த விழிப்பு உணர்வை எல்லா ஊடகங்களிலும் தீவிரப்படுத்தியுள்ளது.
* காசநோயாளிகள் தங்களுக்கான சிகிச்சையைப் பெறுவதில் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவமனைகளையே அதிகம் விரும்புவதால், தனியார் மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை கிடைக்க மகாராஷ்டிர அரசு வழிசெய்து விட்டது.
* மேலும், இப்போது பரவும் காசநோ யானது மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக இருப்பதால், இதற்கென உள்ள விலை கூடிய பிடாகுயிலின் எனும் மருந்தும் தேவைப்படுகிறவர்களுக்குத் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.
* காசநோயைப் பொறுத்தவரை மருந்துகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியதும் முக்கியம். நோயாளி களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கு வழி அமைக்க ரொக்கப் பணம் தருவதோடு, ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்கள், வெல்லம், வேர்க்கடலை போன்றவற்றைக் கொடுப்பதற்கும் ஆண்டுக்கு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது.
* இறுதியாக, காசநோய் ஒழிப்பில் அரசின் பங்கு மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த சமூகமும் இதில் இணைய வேண்டும் என்பதற்காக, இந்த நோயை ஆரம்பத் திலேயே கண்டுபிடிப்பதற்கும், இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நோயாளிகளுக்குச் சிகிச்சை முழுமை யாகக் கிடைப்பதற்கும் உதவுகின்ற மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் சேவையாற்றும் தனியார் நிறுவனங் களுக்கும் கருணைத்தொகை வழங்கவும், வருமானவரிச் சலுகை கொடுக்கவும் வழிசெய்துள்ளது. மேற்சொன்ன இருதிட்டங்களும் இந்தியாவில் முதன்முறையாக மகாராஷ்டிரத்தில்தான் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
* நீரிழிவு நோயும், மது அருந்தும் பழக்கமும் அதிகமாகி வரும் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் காசநோய் பரவும் வேகம் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. நடைமுறைச் சாத்தியமுள்ள திட்டங்களை அரசுகள் இயற்றுவதும் அவற்றை முனைப்புடன் செயல்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயம். காசநோய்க்கு எதிராக இப்போதுள்ள தேசியத் திட்டங்கள் வலுவானதாக இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு செயலில் இறங்கியிருக்கும் மகாராஷ்டிர அரசைப் போல் தமிழகமும் மற்ற மாநிலங்களும் தயாராக வேண்டும்.